பாட்னா : பீகார் மாநிலம் தர்பங்காவில் ரூ. 1,260 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ. 5,070 கோடி மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், முடிவடைந்த மத்திய அரசின் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஹிந்தி உள்பட இந்திய மொழிகளில் மருத்துவப் படிப்பு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பிரதமர் மோடி பேசியதாவது: பீகார் மாநிலம் நிறைய வளர்ச்சியைக் கண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மக்கள் நலனில் உறுதியாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 75,000 மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை கொண்டு வரவுள்ளோம்.
முன்னதாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தில்லி செல்ல வேண்டும் என்பதால் நோயாளிகள் சிரமப்பட்டனர். தற்போது நாடு முழுவதும் 24 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளது. தாய்மொழியில் மருத்துவக் கல்வி என்ற மிகப் பெரிய முடிவை அரசு எடுத்துள்ளது. விரைவில் ஹிந்தி உள்பட இந்திய மொழிகளில் மருத்துவப் படிப்பை கொண்டு வரவுள்ளோம். முசாபர்பூரில் நிறுவப்படும் புற்றுநோய் மருத்துவமனை மூலம் மாநிலத்திலேயே சிறந்த சிகிச்சையை நோயாளிகள் பெறுவார்கள். இந்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் இந்த பகுதியில் ஏற்படும் வெள்ளத்தை சமாளிக்க விரிவான திட்டத்தை அறிவித்துள்ளோம். நேபாள அரசுடன் இணைந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காணுவோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கும் உள்கட்டமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிக்கப்ப்பட்ட திட்டங்களை துவங்கி வைக்கவுள்ளார். பீகார் மாநிலத்தில் ஏற்கெனவே பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை உள்ள நிலையில், தர்பங்காவில் இரண்டாவதாக எய்ம்ஸ் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.