ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களுக்கு எதிரான போட்டியில், யுவராஜ் சிங் தொடர்ந்து காட்டடி அடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
விராட் கோலி எப்படி பாகிஸ்தான் அணியை கதறவிடுவது வழக்கமோ, அதேபோல்தான் யுவராஜ் சிங்கிற்கு, ஆஸ்திரேலிய அணி.
ஆஸ்திரேலிய அணி எதிரான முக்கிய போட்டிகளில், யுவராஜ் சிங் தொடர்ந்து பெரிய ஸ்கோர்களை அடித்து வருகிறார். 2000ஆம் ஆண்டில் இருந்தே இது தொடர்ந்து வருகிறது. 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி நாக்அவுட் காலியிறுதி போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 80 பந்துகளில் 86 ரன்களை குவித்து மேட்ச் வின்னராக இருந்தார்
இதனைத் தொடர்ந்து, 2007ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், 30 பந்தில் 70 ரன்களை குவித்து, இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், பிரெட் லீ போன்ற முக்கிய பௌலர்களை விளாசித்தள்ளினார். 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில், காலியிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த யுவராஜ் உதவினார். இப்படி தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக யுவராஜ் அதிரடி காட்டி வருகிறார்.
2007ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக 6 பந்தில் 6 சிக்ஸர்களை யுவராஜ் சிங் அடித்தப் பிறகு, அவர் களமிறங்கும்போதெல்லாம் யுவராஜ் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது, சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் கூட அதே மாதிரியான எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அரையிறுதியில் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸுக்கு எதிராக தொடர்ந்து சிக்ஸர்களை பறக்கவிட்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.
அரையிறுதியில், முதலில் களமிறங்கிய இந்திய மாஸ்டர்ஸ் அணியில், சச்சின் டெண்டுல்கர் 30 பந்தில் 42 ரன்களை அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்துச் சென்ற நிலையில், அடுத்து யுவராஜ் சிங் தொடர்ந்து காட்டடி அடித்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார். 26 பந்திலேயே அரை சதம் எடுத்த அவர், ஆஸ்திரேலிய முன்னாள் ஸ்பின்னர்கள் ப்ரைஸ் மெக்கென், ஸ்டீவ் ஓ கேப், சேவியர் தோகர்டி ஆகிய ஸ்பின்னர்களுக்கு எதிராக தொடர்ந்து ஸ்விப் ஷாட்களை ஆடி அசத்தினார்.
குறிப்பாக, ஸ்பின்னர் மெக்கெனுக்கு எதிராக தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு வியக்க வைத்தார். இறுதியில் 30 பந்துகளில் ஒரு பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 59 ரன்களை எடுத்து நடையைக் கட்டினார். பின்னி 36 (21), யூசுப் பதான் 23 (10) ஆகியோரும் இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டியதால், இந்திய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 220/7 ரன்களை எடுத்தது. இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் 18.1 ஓவர்களில் 126/10 ரன்களை எடுத்து, 94 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, இந்தியாவை பைனலுக்கு அனுப்பி வைத்தது.